Monday, December 29, 2014

நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

தெய்வத்தாய்….

ISBN 978-93-83188-19-2

சிறுகதைத் தொகுப்பு
க.ராகிலா

128 பக்கங்கள்
விலை ரூ. 70 /-




“எழுத்து எனும் வரத்தால் படைப்பாளியின் வரிகளில் சொல்லப்பட்ட வாழ்க்கைக்குரிய மனிதர்கள் தன் கண்முன் நடமாடிக் கொண்டிருப்பதை வாசகப் பெருமக்கள் உணரமுடிந்தால், அதுதான் ஒரு மகத்தான சிறுகதைக்குரிய மிகப்பெரிய வெற்றி..

வளரும் எழுத்தாளர் க.ராகிலா அவர்களின் தெய்வத்தாய் எனும் இச்சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 28 சிறுகதைகளில் பெரும்பாலானவை பெண்மையின் உணர்வை உன்னதமாய் எடுத்துரைக்கின்றன.”

-    பதிப்புரையில்
வாசகன் பதிப்பகத்தார்
நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com
நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

நம்பிக்கை போதிமரம்

ISBN 978-93-83188-17-8

சுயமுன்னேற்றக் கட்டுரைத் தொகுப்பு
க. சிவராஜ்

96 பக்கங்கள்
விலை ரூ. 60 /-




“தூங்கா விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்று சொல்லப்படுவதைப் போல, இன்றைய தலைமுறை தன்னுள் உயிர்த்திருக்கிற தன்னம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள பல வழிகளை நாடுகிறாது. அவற்றில் முக்கியமானது வாசிப்பு....

தத்தம் இளமைக்காலங்களில் நல்ல நூல்களை வாசித்தவர்கள் பலரும் பிற்காலத்தில் வரலாற்றில் இடம் பிடித்தவர்களே.... இந்த உணமையை வளரும் படைப்பாளரான திரு.க. சிவராஜ் அவர்களின் முதல் நூலான நம்பிக்கை போதிமரம் அழகுற எடுத்துச் சொல்கிறது.

நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும் பொதிந்திருக்கிற நம்பிக்கை தீபம் வாசகர்களுக்கும் சுடர்விடத் தூண்டுகிறாது... வென்றவர்களின் வரலாறுகள், பொன்மொழிகள், சாதனையாளர்களின் படங்கள் போன்றவை கட்டுரைகளை முழுமையாக வாசிக்கவும், வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் தூண்டுவிக்கின்றன....”

-    பதிப்புரையில்...
வாசகன் பதிப்பகத்தார்


விவேகானந்தர், இராமகிருஷ்ணர், புத்தர், நேரு, காமராசர், ரூசோ, பெர்னார்ட்ஷா, சாக்ரடீஸ், அப்துல்கலாம், அன்னை தெரசா போன்ற சான்றோர்களின் அரிய கருத்துகளை நூலில் ஆங்காங்கே எடுத்துக் கூறியுள்ள விதம் க.சிவராஜின் ஆழ்ந்த சிந்தனைத் திறனை புலப்படுத்துகிறது.

-    அணிந்துரையில்
பேராசிரியர். முனைவர் தி. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் - 636011


சிறந்த நூலுக்கான அடையாளமாக பலரும் செல்லும் தகுதிகள்.... இடைவிடாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தல் மீண்டும் மீண்டும் பலமுறை படித்தல், ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருதல்.

இவை அத்தனையும் பொருந்திவரும் நூலாக இருக்கிறது இந்த நம்பிக்கை போதிமரம். பல்வேறு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியாளனாக வலம்வரும் அன்புமாணவரின் மற்றொரு முகம் இந்த நூலின் மூலம் வெளிவந்துள்ளது.

-    வாழ்த்துரையில்
பேராசிரியர். முனைவர் நா. சங்கரராமன்
தமிழ்த்துறை
எம்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி
குமாரபாளையம், நாமக்கல்

நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com

Wednesday, December 3, 2014


நெஞ்சுக்குள் நெருப்பு !
நூல் ஆசிரியர் : கவிஞர் க. தங்கராஜூ  பேச : 99447 72096
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015. விலை : ரூ. 60  செல் : 98429 74697

*****
       அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று.  புவி வெப்பமயமாகி வர, அவ்வெப்பம் தணிக்க புறா விதை எச்சமிட்டு மரம் வளர்வதை உணர்த்தும் விதமாக நன்றாக உள்ளது.  உள்அச்சு வடிவமைப்பு யாவும் நேர்த்தியாக பதிப்பித்த இனிய நண்பர் கவிஞர் ஏகலைவனின் வாசகன் பதிப்பகத்திற்கு பாராட்டுகள். 

 நூலாசிரியர் கவிஞர் க. தங்கராஜூ அவர்கள் கட்டிடக் கலைஞர்.  சொற்களை வைத்து புதுக்கவிதை கட்டிடமும் திறம்பட கட்டி உள்ளார்.  நூலின் வளத்திற்கு உரம் சேர்ப்பதாக உள்ளது.  முகநூலில், இணையத்தில் வலம் வரும் இனிய நண்பர் கவிஞர் ச. கோபிநாத், திரு. சி. மெய்யழகன் ஆகியோர் மிக நன்று.  பதிப்புரையும் முத்திரை பதிக்கும் விதமாக உள்ளது.

       நூலாசிரியர் கவிஞர் க. தங்கராஜூ அவர்களுக்கு இது இரண்டாவது நூல்.  கவிதைகள் முதல் தரமாக உள்ளன.  பாராட்டுக்கள்.  நாட்டு நடப்பை எடுத்து இயம்பி எழுந்திடு என்று உணர்த்திடும் கவிதை நன்று.

எழுந்திடு தோழா!

பட்டப்பகலில் பணங்காசு கொள்ளை 
பச்சப்புள்ள பாலியல் கொடுமை
நாளுக்கொரு நோய் நாடெங்கும் வறுமை 
நாடு போகும் நிலை கண்டு
நடுங்குதே மனம் 
ஏனோ நிதமும் 
கலங்குதே மனம்
இளைய வயதிலே இன்னுமா உறக்கம்? 
எந்தன் தோழா
எழுந்திடு எழுந்திடு 
இந்தியா காத்திடு 
தீமை அழித்திட 
தீயாய் கனன்றிடு!
    
கோவிலுக்கு கடவுளை வணங்கிட செல்வார்கள்.  நூலாசிரியர் கோவிலுக்கு கலையை ரசித்திட செல்வது பற்றி கவிதை வடித்துள்ளார்.

இணைவோம் தோழா!
ஆலயம் பல 
சென்று வந்தேன் 
ஆண்டவனை அறிவதற்காக அல்ல
என் தமிழரின் 
கைவண்ணக் 
கலை அறிவதற்காக!

       தமிழகத்தை அண்டை மாநிலங்கள் அனைத்தும் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன.  காவிரியை கர்னாடகம் சிறைபிடித்து வைத்துக் கொண்டு அடாவடித்தனம் செய்து வருகின்றது.  புதிய அணைகள் கட்டுவோம் என்று மிரட்டியும் வருகின்றது.  காவிரியை வரவேற்று வடித்த கவிதை ஒன்று.

பொங்கி வா காவிரியே!

அன்று 
ஆனந்த வெள்ளத்தில் 
ஆர்ப்பரித்த காவிரியே
இன்று 
அழுவதற்கும் உன்னிடம் 
கண்ணீர்த்துளி இல்லையே
கரிகாலன் காலத்தே 
கரைபுரள வந்தவள் நீ
பச்சைத் தமிழகத்தை 
பாலை நிலம் ஆக்காதே
பொறுத்தது போதும் தாயே 
 பொங்கி வா காவிரியே !

       உழைத்தால் வாழ்வில் உயரலாம்.  வறுமையை இல்லாது ஒழிக்கலாம் என வழி சொல்லும் விதமாக வடித்த கவிதை.

உழைப்போம் உயர்வோம்!
சாதனை பல 
சாதித்துக் காட்டிட 
சோதனை தகர்ப்போம்
சோம்பலைத் துறப்போம்.
உயிரை உறிஞ்சும் 
வறுமையை வீழ்த்திட
உழைப்போம் ! உயர்வோம் !! 
உலகினை உயர்த்துவோம்!

       அடுத்தவர் உழைப்பில் உயிர் வளர்க்கும் சோம்பேறிகளுக்கு புத்தி சொல்லி, உழைக்கச் சொல்லி வலியுறுத்தி வடித்த கவிதை, சோம்பேறிகளின் சோம்பல் நீக்கிடும் கவிதை.

உழைப்பே உயர்வு!

வானம் பொழிய மறுப்பதில்லை 
தென்றல் வீச மறுப்பதில்லை
இமைகள் இமைக்க மறுப்பதில்லை 
மனிதா 
நீ மட்டும்
ஏன் உழைக்க மறுக்கிறாய்?  
உள்ளத்தில் திட்டமிடு
உழைப்பை உரமாக்கு 
முயற்சி எனும் வேருக்கு 
வியர்வை நீர் பாய்ச்சு
வெற்றி எனும் 
கனி சுவைப்பாய் 
பாரினில் என்றும் புகழ் பெறுவாய்.

       தன்னலத்தோடு வாழாமல் பிறர் நலம் பேணி வாழ்வாங்கு வாழ்ந்தால் இறந்த பின்னும் வாழ முடியும் என்பதை உணர்த்தும் விதமாக வடித்த கவிதை.

பயன்பட வாழ்!

வாழ்வின் அர்த்தம் 
வகையாய்ச் சொல்லும்
தனக்கென் வாழ்ந்து 
தனிமரமாய் ஆகாதே.
பிறர்க்கென வாழ்ந்து 
சரித்திரம் படைத்திடு.

       நீதிமன்றம் வலியுறுத்திய போதும் நடுவது இல்லை மரம். மரங்களை வெட்ட வெட்ட மழை பொய்க்கும்.  மழை வேண்டுமென்றால் மரங்கள் நட வேண்டும்.  ஒரு மரம் வெட்டினால் பத்து மரங்கள் நட வேண்டும் என்ற உள்ளம் வேண்டும்.  மரம் நட வலியுறுத்தும் கவிதை நன்று.

மரம் நடு ! மனிதா!

காற்றும் கெடுது 
கார், வண்டிப் புகையால்
மழையும் பொய்க்குது 
மரங்கள் அழிவால்
மண் வளம் குறையுது 
இரசாயண உரத்தால்
நீரும் கெடுது 
தொழிற்சாலைக் கழிவால்
விழித்திடு மனிதா விழித்திடு 
மரம் நடு! மரம் நடு!
மண்ணெல்லாம் மரம் நடு 
மரத்தினை நட்டு 
மண்ணுயிர் காத்திடு !

       நிலவு பற்றி கவிதை பாடாத கவிஞர் உண்டோ?  இல்லை.  எல்லாக் கவிஞர்களும் நிலவு பற்றி ஒரு பாடலாவது எழுதி விடுவார்கள்.  காரணம் எல்லோராலும் விரும்பப்படுவது நிலவு.  நூலாசிரியர் கவிஞர் க. தங்கராஜூ அவர்களும் நிலவு பற்றி எழுதி உள்ளார்.  பாருங்கள்.

வெண்ணிலவே!
விண்ணோடு நீயிருந்தும் 
மண்ணோடு நானிருந்தும்
கண்ணோடு காண்கின்றேன் 
வெண்ணிலவே உன்னை
உன் அழகைக் காட்டித்தான் 
ஊட்டி விட்டாள் அன்னை
உன் உருவைக் காட்டித்தான் 
தினம் வளர்த்தாள் அன்னை
பிறை நிலவே முழு நிலவே 
பளபளக்கும் எழில் நிலவே
வெண்மதியே ஓவியமே 
வாழிய நீ வாழியவே!

       ஊடகத்தில் குறிப்பாக தொலைக்காட்சியில் திட்டமிட்டு தமிங்கிலம் பரப்பி வருகின்றனர்.  தமிழ்க்கொலை நாளும் நடத்தி வருகின்றனர்.  தமிங்கிலத்தை சாடி வடித்த கவிதை நன்று. படைப்பாளிகள் அனைவரும் தமிங்கிலத்திற்கு எதிராக உரக்கக்குரல் கொடுத்து தமிங்கிலம் ஒழிக்க முன்வர வேண்டும்.  இந்நிலை இப்படியே தொடர்ந்தால் தமிழ்மொழி சிதைந்து போகும்.  விழிப்புணர்வு வர வேண்டும்.

தமிழைக் காப்போம் !

அம்மா என்பது 
மம்மி யானது 
அப்பா என்பது 
டாடி யானது
அத்தை என்பது 
ஆன்ட்டி யானது 
மாமா என்பது 
அங்கில் ஆனது
ஆக மொத்தம் 
அன்னைத் தமிழானது 
அழிந்தே போகுது
அழகுத் தமிழில் 
அனைத்தும் இருக்க 
அன்னிய மொழி எதற்கு?
அழகுத் தமிழினை 
அள்ளிப்பருகிடு 
அன்னைத் தமிழினை 
அனுதினம் காத்திடு.

       கொடி கட்டி வாழ்ந்தவன் தமிழன்.  யானை கட்டிப் போரடித்தவன் தமிழன்.  கல்லணை கட்டியவன் தமிழன்.  கலைகள் பல வடித்தவன் தமிழன். உலக அரங்கில் தமிழன் என்றால் ஆற்றல் மிக்கவன் என்ற பெயர் உண்டு.  உலகின் முதல் மொழியான தமிழ் மொழியினை தாய்மொழியாகக் கொண்டு தமிழா, தமிழராகப் பிறந்ததற்காக, பெருமை கொள் என்கிறார் நூலாசிரியர் கவிஞர் க. தங்கராஜூ.

பெருமை கொள் தமிழா!

பாம்புக்குப் பால் வார்த்து 
முல்லைக்கு தேர் கொடுத்து
மயிலுக்கு போர்வை தந்து 
புறாவுக்கு சதை கொடுத்தது
எங்கள் தமிழ் இனமே !
வந்தார்க்கு வாழ்வளித்து 
வருவோரை வரவேற்று
மகிழ்வோடு விருந்தோம்பி 
மனிதநேயம் காத்திட்ட(து)
எங்கள் தமிழ் இனமே !
அன்பே அறமென்று 
வாழ்ந்து காட்டியது
தங்கத் தமிழினம் தான் 
தரணிக்கு அதை ஓது!

       இப்படி நூல் முழுவதும் தமிழ், தமிழர் பற்றுடனும், சுற்றுச்சூழல் ஆர்வத்துடனும் இயற்கை நேசத்துடனும் வடித்த கவிதைகள் நன்று. நூல் ஆசிரியர் கவிஞர் க. தங்கராஜூ அவர்களுக்கு  பாராட்டுகள்.
.


நன்றி - கவிஞர் இரா .இரவி

பல்வேறு இணையதளங்களில் வாசிக்க...