Saturday, April 27, 2013


கவிஞர் ஏகலைவன் அவர்களின் “குறையொன்றுமில்லை” நூல் குறித்து சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வாழ்த்து மடல்

அன்பு நண்பர் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கு

இனிய வணக்கம்

தங்களுடைய சிந்தனைத் தொழிலகத்தின் புதிய படைப்பாகிய “குறையொன்றுமில்லை…” என்னும் வாழ்வியல் சிந்தனை தேரோட்டத்தின் ஊர்வலத்தில் சிறிது நேரம் வாசிப்பு உலா போனேன். அருமையான சிந்தனைத் துளிகளைத் தொகுத்தி சிகரம் தொடும் வழிகளை நடைமுறை சாத்தியத்தோடு கொடுத்துள்ளீர்கள்.

தாங்கள் சிந்திக்க எடுத்துக் கொண்ட தலைப்புகளாகிய “கல்விக்குக் கை கொடுப்போம்”, “சக உயிர்களை நேசிப்போம்”, “வாழ்ந்து பார்க்கலாம்”, “சிக்கனத்தில் உள்ள சுகம்” போன்றவை என்னை சிந்தனைக் கடலில் மூழ்கடித்து தெளிவு முத்துக்களை அள்ளித் தெளித்தன! பாராட்டுக்கள்!!

தொடர்ந்து சிந்தித்து இன்னும் நிறைய படைப்புகளைத் தருக! படைப்புலகம் மகிழட்டும்! வரும் தலைமுறை வாழ்ந்து சிறக்கட்டும்…!

அன்புடம்

சிந்தனைக் கவிஞர்
Dr. கவிதாசன் M.A., M.A., M.A., B.L., Ph.D.,
இயக்குனர்
ரூட்ஸ் நிறுவனங்கள்


Tuesday, April 9, 2013













குழந்தைகளைத் தேடும் கடவுள் – நூல் ஆய்வரங்கம்

கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் “குழந்தைகளைத் தேடும் கடவுள்” நூல் ஆய்வரங்க நிகழ்ச்சி 7.4.2013, ஞாயிறு மாலை 6 மணியளவில் சேலம் விஜயராகவாச்சாரியார் நூலக அரங்கில் நடைபெற்றது.

செந்தமிழ்த் தேனீ செந்தில்குமார் வரவேற்புரை வழங்கி, நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.

 நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சண்முகா மருத்துவமனை மேலாண் இயக்குனர் மருத்துவர் திரு. பி.எஸ். பன்னீர்செல்வம், “ இளைஞர்கள் பலர் மொழிமீது ஆர்வம் கொண்டு புதிய களங்களில் தங்களை வெளிப்படுத்திவருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

கவிஞர் முல்லை வேந்தன், கவிஞர் அய்யா.துரைசெல்வம், வாசகன் பதிப்பக பதிப்பாசிரியர், நம்பிக்கை வாசல் இதழ் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன், தலைமையாசிரியர் திரு. சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் குறித்த ஆய்வுரையை மக்கள் பாவலர், நகைச்சுவை அரசு. சின்னு பாண்டியராசு அவர்கள் வழங்கினார். ஆய்வுரையின்போது, “கவிஞர் ச. கோபிநாத் அவர்கள் என்னுடைய மாணவர் என்று கூறிக்கொள்வதில் உள்ள மகிழ்ச்சியைவிட, அவருடைய ஆசிரியர்  நான் என்று சொல்லிக்கொள்வதிலே தான் எனக்கு மகிழ்ச்சி. இது அவருடைய இரண்டாவது நூல் என்று சொல்லமுடியாத அளவுக்கு தெளிந்த பார்வையோடும் சிறந்த கட்டமைப்போடும் நூலை வடிவமைத்து இலக்கிய உலகிற்கு பரிசளித்திருக்கிறார் கவிஞர். ஹைக்கூவும் சேலமும் என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருபவர் கவிஞர் பொன்.குமார் அவருடைய வரிசையில் அடுத்த இடம் இனி கவிஞர் ச. கோபிநாத் அவர்களுக்குத் தான் என்றார்.

மகாகவி பாரதி இன்றளவும் விஸ்வரூபமெடுத்து வியாபித்து நிற்பதற்கு காரணம் அவருடைய கவிதைகள் மக்களைப் பாடியது தான். அதே கவிஞர் ச. கோபிநாத் அவர்களின் “குழந்தைகளைத் தேடும் கடவுள்” நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் மக்களைப் பாடுகிறது. இதுவே நூலின் முதல் வெற்றி.

நம் பண்பாடு மறந்து போன விளையாட்டுகள், காலமாற்றத்தில் அறிவியல் நமக்களித்திருக்கும் பரிசுகளாய் கிடைத்த நோய்கள், தொலைக்காட்சியில் தொலைந்து போன வாழ்க்கை முறை, இன்றைய கல்வி முறையின் நிதர்சனங்கள், சமுதாயத்தின் இன்றைய நிலையை படம்பிடித்துக்காட்டும் சூழல்கள் என அனைத்து தளங்களிலும் தன் கவிச்சாட்டையை சுழற்றியிருக்கிறார் கவிஞர் ச. கோபிநாத்.  மனிதம் பேசும் படைப்பாக குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் மலர்ந்திருப்பது மகிழ்வை தருகிறது. இத்தகைய சிறந்த நூலை கொணர்ந்தமைக்காக வாசகன் பதிப்பகத்தையும் மனதார பாராட்டுகிறேன்” என்று ஆய்வின் வழியே குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் குறித்த தன் பார்வையை பதிவு செய்தார் மக்கள் பாவலர் சின்னு. பாண்டியராசு.

     கவிஞர் ச. கோபிநாத் அவர்கள் ஏற்புரை வழங்கினார்,

வாசகன் பதிப்பகம் சார்பில் அனைவரும் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக நூலகர் சின்னதம்பி நன்றியுரை கூறினார்.

Friday, April 5, 2013


நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

குறையொன்றுமில்லை…
வாழ்வியல் சிந்தனைத் தேரோட்டம்

சுயமுன்னேற்றக் கட்டுரைத் தொகுப்பு
கவிஞர் ஏகலைவன்

ISBN – 978-81-924351-9-0
120 பக்கங்கள்
விலை ரூ. 60 / -

பறக்கத் துடிக்கும் பறவைக்கு வானம் கூட தொட்டுவிடும் தூரம்தான் என்பதை இளைய சமுதாயத்துக்கு உணர்த்தும் நம்பிக்கை நட்சத்திரம் கவிஞர் ஏகலைவன் அவர்களின் சிறப்பான வாழ்வியல் சிந்தனைகளின் தொகுப்பு இந்நூல்.

செயலே சிறந்த சொல் என்பதை நிரூபித்து வரும் இந்த வெற்றியாளார் தனது கருத்துக்களைத் திணிக்காமல் சாதிக்கத் தூண்டும் வாழ்க்கைச் சம்பவங்களோடும், குட்டிக் கதைகளோடும், கவிதைகளோடும் சிந்தனைகளைப் பதிய வைக்கும் விதத்தில் அமைந்த கட்டுரைகளின் எளிய நடையும், நேர்த்தியான புகைப்படங்களும் நூலுக்கு களம் சேர்க்கின்றன.

-    வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்

கல்வி, தடை, முயற்சி, உடற்குறை, சிக்கனம், நட்பு, சிகரத்தை எட்டுதல், உறவு, வெற்றி, சவால், நேசிப்பு, வார்த்தை போன்றா வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள் அனைத்தையும் குறையொன்றுமில்லை… தொட்டிருக்கிறது.

குறிப்பாக, நம் நாட்டில் நம் ஊருக்கு அருகில் இருக்கும் கலைமாமணி எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய வரிகளைப் புரட்டிப் பார்க்கும் பொழுது, ‘உடற்குறைகளால் ஏற்படும் பலவீனத்தைக் கடக்க முயல வேண்டுமே தவிர, அதனுடைய இழப்பையே காரணமாகக் காட்டிக் கொண்டு, அவற்றிலிருந்து மீண்டு வந்து முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கக் கூடாது’ எனும் வரிகளைப் படிக்கும் ஒவ்வொரு இளைஞனும் தன்னை உணர்ந்து, இந்திய நாட்டின் மீதும் இச்சமுதாயத்தின் மீதும் அக்கறைக் கொண்டு செயலாற்ற உத்வேகம் பிறப்பிப்பதாக அமைந்திருக்கிறது.

-    Winner Dr. T. M. மோகன்
மாவட்டத் தலைவர்
மத்திய அரசின் திட்டக்குழு
நாமக்கல் மாவட்டம்
நூலின் அணிந்துரையில்

ஒரு செயலை மேற்கொண்டால் ஏற்படும் தோல்விகளைப் படிக்கட்டுகளாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தடைக்கற்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற உன்னதமான சிந்தனையை தன் வாழ்வியல் கருத்தியலாகக் கொண்டு, சோதனைகளை சாதனைகளாக மாற்றி வரும் தாங்கள் மென்மேலும் வளர என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

-    டாக்டர் பெ. வீரமணி
ஊனமுற்றோர் நலவாரிய முன்னாள் உறுப்பினர்
மாநில மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வு சங்க செய்தி தொடர்பாளர் மற்றும் பொருளாளர்
நிறுவனர் – இயக்குனர் அன்பகம் – மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி மற்றும் காப்பகம்)
நூலின் அணிந்துரையில்

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com


Thursday, April 4, 2013

வாசகன் பதிப்பக வெளியீடான அவள் வரும் நேரம் நூல் குறித்த நூல் 

மதிப்புரை தினத்தந்தி – 3.4.2013 இதழில்