Wednesday, May 25, 2016


நூலாய்வு
மகரந்தச் சேர்க்கை
கவிஞர் தியாக.இரமேஷ்

“பூக்களின் மீது வண்டுகள் அமர்ந்து செல்வதைப் போல் நமது வாழ்க்கை இருத்தல் வேண்டும்” என்கிறது ஓர் பொன்மொழி. மனிதன் தன் வாழ்க்கையின் சுவடுகளை இம்மண்ணில் மிக மென்மையாகவும் நினைவுகூறும் வகையிலும் பதிக்கும்படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் ஓர் அற்புதக் கருத்தை விதைக்கிறது இப்பொன்மொழி.

தன் வாழ்க்கையின் நினைவுகூறத்தக்க நல்ல நிகழ்வுகளோடு, தன் படைப்புகளையும் ஒருங்கிணைத்து முத்திரை பதிக்கும் பதிவாக வெளிவந்திருக்கிறது கவிஞர் தியாக இரமேஷ் அவர்களின் “மகரந்தச் சேர்க்கை” நூல்.

சிங்கப்பூரில் வாழும் கவிஞர் தியாக இரமேஷ், சிங்கப்பூரில் நடக்கும் தமிழ் நிகழ்வுகளை புகைப்படங்களின் வழியாகவும் அறிவிப்புகளின் வாயிலாகவும் பதிவு செய்யும் இனிய தமிழ்ப்பணியை செய்து வருபவர். தன் தமிழ்ச் செயல்பாடுகளின் வாயிலாகவும் தன் படைப்புகள் மூலமாகவும் எல்லோரின் அன்பைப் பெற்ற கவிஞரின் நான்காவது நூல் “மகரந்தச் சேர்க்கை”.

“நாடென்ன தானேவளரக் காட்டுச்செடியா?
உழைப்பு நீர் ஊற்றி, உண்மை ஒளிபாய்ச்சி
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக
வாகாய், வாஞ்சையாய் வளர்த்து…
உலகின் துருவநட்சத்திரமாக்கிய
எங்களின் விடிவெள்ளி…”
என்று சிங்கப்பூரின் தந்தை “லீ குவான் யூ” அவர்களைப்பற்றிக் கூறி, அவருக்கே நூலை சமர்ப்பித்திருக்கும் கவிதையுடன் தொடங்குகிறது நூல்.

திருக்குறள், உலக அரங்கில் தமிழனை தலைநிமிரச்செய்து, காலங்கள் கடந்தும் நிற்கும் உன்னதப் படைப்பு. மனிதன் எப்படி வாழ வேண்டும் என வழிகாட்டும் அற்புத நூலின் ஒவ்வொரு கருத்தும் மனிதர்களுக்கு வாழ்க்கைப் பாடம். “இரண்டு அடி கொடுத்தால் தான் திருந்துவாய் வாங்கிக் கொள் வள்ளுவனிடம்” கவிஞர் அறிவுமதி அவர்களின் திருக்குறள் குறித்த ஹைக்கூ. இதையே கவிஞர்,
“பல குரல் தேவையில்லை
மனித உயர்வுக்குப் போதும்
ஒரு குறள்”
என்று வள்ளுவத்தின் பெருமையை தன் பாணியில் கூறுகிறார்.

     தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்குவதும், அதை தன் கவிதைகளில் அழகுத் ததும்ப கூறுவதும் கவிஞர்களின் இயல்பு. அழகியல் கவிதைக்கு மென்மேலும் உயிரூட்டக்கூடிய அற்புதம். மனிதர்கள் மட்டும் இவ்வுலகின் அழகை இரசிக்கவில்லை, விலங்குகளும் ரசிக்கின்றன என்பதை பதிவு செய்யும் கவிதை,
     “தாகமெடுத்தும்
     நீர்குடிக்காமல் தவிக்கிறது மாடு
     குளத்தில் நிலா”.

     இதே போன்று மண்ணோடு தன்னை பிணைக்கும் மழையின் அழகியலைப் பதிவு செய்யும் மற்றுமொரு கவிதை,
     “விழும் மண்னின் நிறமேற்று
     ஊரோடு ஒட்டி ஒழுகும்
     மழை”.
ஊருடன் கூடி வாழ்வதே மனிதர்க்கு அழகு என்ற கருத்தை பதிவு செய்வதோடு மழையின் இயல்பையும் பதிவு செய்யும் இனிய பதிவாக இக்கவிதைத் திகழ்கிறது.

     “சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.” சொல்வன்மை குறித்த வள்ளுவரின் குறட்பா. சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது என்பதை,
     “உள்ளே ஒன்றும் இல்லாத
     சொல்லும் நெல்லும்
     பதர்”
என்று சொல்லை நெல்லோடு ஒப்பிட்டு பயனுடைய சொற்களின் பெருமையை பதிவு செய்திருக்கிறார் கவிஞர் தியாக இரமேஷ்.

     வாழ்க்கையின் இயல்பை அறிந்து, வாழ்தலின் பயனை தத்துவப் பார்வையோடு அணுகும் கவிஞரின் இயல்பை தொகுப்பின் சில கவிதைகள் அழகாய் உணர்த்துகின்றன. “மனிதனின் மனம் குரங்கு” என்பார்கள். அந்த மனம் ஒன்றை விட்டுச்சென்றாலும் அதையே மீண்டும் நாடும் என்பதை,
     “தூரத் தூரத் துரத்தினாலும்
     வேண்டாததை நாடத்தான் செய்கிறது
மனம்”
என்ற கவிதையின் வழி பதிவு செய்கிறார் கவிஞர்.

     மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் அடையாளமாக இம்மண்ணில் எதையேனும் விட்டுச்செல்லும் வேண்டும். அவை வீரியமானதாக இருக்க வேண்டும். அதுவே நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் என்பதை,
     “இருப்பை விட்டுச்செல்வோம்
     எச்சமாக இல்லாமல்
     விதையாய்
என்கிறார் கவிஞர்.

     வாசித்தல் என்பதை மனிதன் சுவாசித்தலைப் போல செய்ய வேண்டும் அப்போது தான் மனிதனால் சாதிக்க முடியும். நூல் வாசிப்பு நமக்கு உலகை நமக்கு அறிமுகப்படுத்தும், அதுபோல் நம்மை நாம் வாசித்தால் சுயபுரிதலுக்கு வழிவகுக்கும் என்பதை,
     “படி
     படிக்கப் பழகு
     உன்னையும் சேர்த்து”
என்கிறார் கவிஞர்.

     இன்றைய இளைஞர்கள் துரித உணவுகளை உண்பதைப்போலவே, எதையும் தயார் நிலையிலேயே எதிர்பார்க்கிறார்கள். அறிவிற் சிறந்தவர்களாயிருப்பினும், உழைக்கத் தயங்கும் சோம்பலோடு இருப்பதால் அவர்களின் சாதனைகள் தடைபடுகின்றன என்பதை,
     “பஞ்சுக்குப் பதிலாய் தலையணையையே
     இலவமரத்தில் எதிர்பார்க்கும்
     இளைஞர்கள்”
என்கிற கவிதையின் வாயிலாகப் பதிவு செய்கிறார்.

     நூலெங்கும் இருக்கும் கவிதைகளில் ஹைக்கூ சாயல் இருப்பதை உணர முடிகின்றது. தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த இனிய நிகழ்வுகளின் புகைப்படங்களோடு தன் கவிதைகளையும் பதிவு செய்திருப்பது, வாசகர்கள் பார்த்து மகிழவும் படித்து சுவைக்கவும் ஏதுவாக இருக்கின்றது.

வாசகன் பதிப்பகத்தாரின் நேர்த்தியான வடிவமைப்பு, நூலை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வையும் தருகிறது.  

     “வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்தவர்களால் தான் இதுபோல் எழுத முடியும். கவிஞர் ஒவ்வொன்றையும் அனுபவித்திருக்கிறார். அதனால்தான் கவிதைகளில் உண்மையும், பாசாங்கற்றா தன்மையும் வெளிப்படையாகத் தெரிகின்றன” என்று அணிந்துரையில் முனைவர் இரத்தின புகழேந்தி கூறியிருக்கும் வார்த்தைகளை வாசகர்கள் தங்கள் வாசிப்பின் வாயிலாகவும் உணர முடிகின்றது என்பதே இத்தொகுப்பின் வெற்றியாகத் திகழ்கிறது.

நூலாய்வு
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்

9790231240

4 comments:

  1. “வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்தவர்களால் தான் இதுபோல் எழுத முடியும். கவிஞர் ஒவ்வொன்றையும் அனுபவித்திருக்கிறார். அதனால்தான் கவிதைகளில் உண்மையும், பாசாங்கற்றா தன்மையும் வெளிப்படையாகத் தெரிகின்றன”
    https://www.youtube.com/edit?o=U&video_id=gxFBWiqI7gQ

    ReplyDelete
  2. SUPER POST
    https://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I

    ReplyDelete
  3. excellent post
    https://www.youtube.com/edit?o=U&video_id=lR-9f_sX4CE

    ReplyDelete